மஞ்சள் நிலாவுக்கு ...

Sunday, 4 July 2010

தோற்றப்பிழை


ஞாயிறுகளில் பொழுது புலரும் போதே
ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.
ஆண்மக்கள் ஓய்வெடுக்க
பெண்மக்கள் இன்றும் உழைக்க...
ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.

எட்டுக்கு பிள்ளையும்,
பத்துக்கு புருசனும்
எழும் முன்னே காலை உணவும்,
மதியம் உண்ண கறி உணவும்
சமைத்து விட்டு,
நான் சாப்பிட நேரமிருக்காது.

வாரமாய் சேர்ந்த அழுக்காடைகள்...
கொட்டிக் கிடக்கும் குப்பைகள்...
சிதறிய நாளிதழ்கள்...
உண்டு தூங்கும் கணவனின்
தூக்கம் கலைக்காமல்
அறை கூட்டி முடிக்கையில்
மணி மதியம் மூன்று.

குளிக்கச் செல்கையில்
பசியோடு வந்தான் என் பிள்ளை.
பரிமாறிவிட்டு நான் உண்ண உட்கார்ந்தால்,
புருசனின் துணிகள் இன்னும்
தேய்க்கப்படவில்லையாம்.

இனியேது எனக்குப் பசி?
சமையலறை ஒழித்து
தொலைக்காட்சியில் படம் பார்க்க
அமர்ந்த வேளையில்,
வந்தது சொந்தக்காரர்கள் கூட்டம்.

ஓய்ந்தொழிந்து தூங்கப்போனேன்.
புருசனின் பசியில் என் பசி அடங்கிற்று.

ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.
இனி வேண்டாம் ஞாயிறு விடுமுறை.
தேவை இனி திங்கள் விடுமுறை.

Labels: